மௌனங்கள் உடைபடும் காலம் இது. ஒரு காலம் இருந்தது. செக்ஸ் பற்றிப் பேசினாலே பாவம்; பாலியல் குறித்து விவாதிப்பதே வரம்பு மீறிய செயல் என்றெல்லாம் கருதப்பட்டு வந்தது. அதன் காரணமாக புதுமணத் தம்பதிகளுக்குக்கூட இஸ்லாம் கூறும் பாலியல் வழிகாட்டுதலை வழங்காமல், ‘கட்டுப்பாடு’ எனும் போர்வையில் பாலியல் அறியாமையைத்தான் வளர்த்து வந்தோம். இதனால் இளம் தலைமுறையினர் வழிமாறிச் செல்லத் தொடங்கினர். பாலியல் பற்றி முஸ்லிம் அறிஞர்களிடமோ பெரியவர்களிடமோ பேசினால் தப்பாக நினைப்பார்கள் என்பதால் அதுபற்றிய தங்களின் ஐயங்களுக்கு மார்க்கத்துக்கு வெளியே தீர்வுகளைத் தேடத் தொடங்கினார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆனால் இப்போது காலம் மாறுகிறது. இது தகவல் தொழில்நுட்ப யுகம். ஒரு பொத்தானின் தட்டலில் பிரபஞ்சமே விரியும் காலம். பாலியல் எம்மாத்திரம்? ஆகவே இனியும் மௌனம் அழகன்று. இளைஞர்களுக்கும் புதுமண இணைய-ருக்கும் கணவன்-மனைவியர்க்கும் இல்லற உறவு குறித்தும் பாலியல் விவகாரங்கள் குறித்தும் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதலை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகி விட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் விதத்தில்தான் ‘இஸ்லாத்தில் இல்லறம்’ எனும் இந்த இனிய நூலை வெளியிட்டுள்ளோம்.
சமூகத்தின் மிகச் சிறிய, ஆனால் முக்கியமான உறுப்பு குடும்பம் ஆகும். திருமண உறவின் மூலமாகவே அது வடிவம் கொள்கிறது. பொருத்தமான இல்லறம்தான் பக்குவமான தலைமுறைக்குத் தொட்டில் இடுகிறது. குடும்ப உறவுகள் சிதையுமேயானால் சமுதாய அமைப்பே நிலைதடுமாறிப் போய்விடும். ஆக்கபூர்வமான சமுதாய அமைப்புக்கு உறுதியான குடும்ப உறவுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்.
சிறிய செயலைக்கூட அழகாகச் செய்ய வேண்டும் எனில் சில நியமங்களையும் வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இல்வாழ்க்கை என்பது ஓர் அறம்; ஒரு கலை; பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டிய அழகியலின் வெளிப்பாடு; பண்புகள் மிளிர வேண்டிய பாசமலர்த் தோட்டம்; இல்லறத்தின் நோக்கம் வெறும் பாலியல் வேட்கை மட்டுமன்று; குறுகிய காலத்திற்கான ஏற்பாடுமன்று. மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து வந்த இரண்டு இதயங்கள் ஆயுள் காலம் வரை கருத்தொருமித்து வாழ்வதற்குப் பெயர்தான் இல்லறம். வரும் தலைமுறைக்கு அடித்தளமாக இருப்பதுதான் இல்லறம். அறிவும் பயிற்சியும் அதற்கு மிகமிக இன்றியமையாதவை ஆகும். அதனால்தான் இத்துறை குறித்து இஸ்லாம் மிக ஆழமான, அழகான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த நூலை மலையாளத்தில் எழுதியவர் புகழ்பெற்ற மார்க்க அறிஞரும் பன்னூலாசிரியருமான ஷேக் முஹம்மத் காரக்குன்னு ஆவார். கேரள இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அவர் பன்முக ஆற்றல் கொண்டவர்.இஸ்லாமிய ஒளியில் இல்லறம் குறித்த இதுபோல் ஒரு நூல் அதற்கு முன்பு மலையாளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அந்த அரிய நூலை ஆர்வத்துடன் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் கே.எம்.முஹம்மத் அவர்கள். மூல நூலாசிரியர் அறிஞர் முஹம்மத் அவர்களுக்கும், மொழியாக்கம் செய்த கவிஞர் முஹம்மத் அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் உரித்தாகுக.
இஸ்லாத்தில் இல்லறம் குறித்து இத்தனைத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுதான் முதல்முறை. இல்லற வாழ்வின் எல்லாக் கிளைகளையும் இணைத்துத் தொகுத்து வகுத்து இதுபோல் ஒரே நூலில் சொல்லியிருப்பது அரிதினும் அரிதே. பாலியல் உறவு குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதுடன் இதர மதங்களின் கண்ணோட்டம் என்ன என்பதையும் ஆதார நூல்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்வது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். இல்லற வாழ்வில் இணைந்து இருப்பவர்களும் இணைய இருப்பவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும். இஸ்லாம் கூறும் இல்லற நெறி எத்துணை அழகானது என்பதை எண்ணி எண்ணி உணர்ந்து, அதற்கேற்ப தங்கள் இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு இம்மை நலன்களையும் மறுமை வெற்றிகளையும் பெறுவோமாக!
Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
Publisher: ISLAMIC FOUNDATION TRUST