67:1 யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான். 67:2 அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். 67:3 அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா? 67:4 மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்! 67:5 நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 67:6 எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும். 67:7 அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும் 67:8 கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று! 67:9 அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.” 67:10 மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.” 67:11 இவ்வாறு அவர்களே தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். சாபம் உண்டாகட்டும், இந்த நரகவாசிகள் மீது! 67:12 பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு. 67:13 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான். 67:14 எவன் படைத்து இருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.