37:1 அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக! 37:2 பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக! 37:3 பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக! 37:4 உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்; 37:5 அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான். 37:6 அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம். 37:7 மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம். 37:8 ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள். 37:9 அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது. 37:10 ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது. 37:11 இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம். 37:12 உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்! 37:13 விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. 37:14 ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள். 37:15 மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே; 37:16 நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? 37:17 முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?” 37:18 இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.” 37:19 ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்! 37:20 அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!” 37:21 எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது!
◄அத்தியாயம் 37. அஸ்ஸாஃப்ஃபாத் ► | முன் | ◄ வசனம் 1-21 of 182 ► | பாஅத | இ-மெயில்