36:1 யாஸீன். 36:2 ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக, 36:3 திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்; 36:4 நேரிய வழியில் இருக்கின்றீர். 36:5 (மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும். 36:6 தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! 36:7 அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. 36:8 நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். 36:9 மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை. 36:10 அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். 36:11 யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக! 36:12 திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.