18:1 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. 18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; 18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் 18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்! 18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். 18:6 (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! 18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! 18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். 18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? 18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!” 18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். 18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக!