17:94 மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம் அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, “அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?” என்று அவர்கள் கேட்டதுதான். 17:95 அவர்களிடம் கூறும்: “பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!” 17:96 (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கும் உங்களுக்கு மிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான்.” 17:97 யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் எவர்களை வழிகேட்டிலே ஆழ்த்துகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து வேறு எந்தப் பாதுகாவலரையும் நீர் காணமாட்டீர். மறுமைநாளில் நாம் அவர்களை முகம் குப்புற இழுத்து வருவோம்; குருடர்களாய்; செவிடர்களாய் மேலும், ஊமையர்களாய்! அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும்போது நாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வோம். 17:98 அவர்கள் நம் சான்றுகளை நிராகரித்ததற்கும், “நாங்கள் வெறும் எலும்புகளாகி மக்கி மண்ணோடு மண்ணாய் ஆகிவிட்ட பிறகு புத்தம் புதிய படைப்பாய் நாங்கள் எழுப்பப்படுவோமா?” என்று கேட்டதற்கும் உரிய கூலியாகும் இது. 17:99 வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்ற அல்லாஹ் இவர்கள் போன்றவர்களைப் படைப்பதற்குத் திண்ணமாக வல்லமை பெற்றவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா, என்ன? அவனே அவர்களை ஒன்று சேர்ப்பதற்கென குறிப்பிட்ட ஒரு காலத்தை நிர்ணயித்துள்ளான்; அது வருவது திண்ணம்! ஆயினும், கொடுமை புரிபவர்கள் அதனை மறுப்பதிலேயே பிடிவாதமாக இருக்கின்றார்கள். 17:100 (நபியே! இவர்களிடம்) கூறும்: ஒருவேளை என் அதிபதியின் அருட்களஞ்சியங்கள் உங்கள் கைவசத்தில் இருந்திருந்தால் செலவாகிவிடுமோ எனும் அச்சத்தில் நிச்சயம் அவற்றை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள். மனிதன் உண்மையிலேயே குறுகிய மனம் படைத்தவனாக இருக்கின்றான்.
◄அத்தியாயம் 17. பனூ இஸ்ராயீல் ► | முன் | ◄ வசனம் 94-100 of 111 ► | பாஅத | இ-மெயில்